ஐடி ரெய்டு.. கட்டிலுக்கு அடியில் கட்டு காட்டாக சிக்கிய ரூ. 42 கோடி - தொக்கா மாட்டிய காண்டிராக்டர்!
வருமான வரித்துறை சிடீரென சோதனையிட்டதில் ரூ.42 கோடி வசமாக சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காண்டிராக்டர்
பெங்களூருவில் காண்டிராக்டராக இருந்து வருபவர் அம்பிகாபதி. இவர் அரசு காண்டிராக்டர்கள் சங்கத்தின் துணை தலைவராகவும் உள்ளார், இவரது மனைவி அஸ்வதம்மா மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர். கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வரிசையில், ஆர்.டி நகரில் உள்ள இவர்களின் வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு வீடு பூட்டி இருந்தது, திறந்து வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
சிக்கிய பணம்
இந்நிலையில், அங்குள்ள படுக்கை அறையில் கட்டிலுக்கு அடியில் அட்டை பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 23 அட்டைப் பெட்டியில் ரூ.500 நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கின. மொத்தமாக, ரூ.42 கோடி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. மேலும், தெலங்கானா தேர்தலில் பணத்தை இறக்குவதற்காகக் கர்நாடகாவில் காங்கிரஸ் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியிருக்கிறது.
இதுகுறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, "இந்தப் பணத்தை தெலங்கானாவில் நடக்கவிருக்கும் தேர்தலுக்காக அங்கு அனுப்ப காங்கிரஸ் வசூலித்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தலைச் சந்திப்பதற்காக, கர்நாடகாவை ஏடிஎம்-ஆக மாற்றியிருக்கிறது காங்கிரஸ் அரசு.
இது வெறும் சாம்பிள் மட்டும்தான். இன்னும் பெரிய தொகை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தப் பிரச்னையில் ஒப்பந்ததாரர்கள் பேச வேண்டும்" என்று கூறியுள்ளார்.