ஐடி ஊழியரை கொன்று புதைத்த நண்பர்கள் - காரணம் என்ன?
நண்பர்களே சேர்ந்து ஐடி ஊழியரை கொன்று ஏரிக்கரையில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் மகன் விக்னேஷ் (27). விக்னேஷ், ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஜூன் 11ம் தேதி வீட்டை விட்டுச் சென்ற விக்னேஷ் அதன் பின் வீடு திரும்பவில்லை.
எங்கு தேடியும் விக்னேஷ் கிடைக்காததால் விக்னேஷின் தந்தை தங்கராஜ் மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விக்னேஷ் புகைப்படத்துடன் காணவில்லை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து விசாரிக்க தொடங்கினர்.
கொலை
விசாரணையில் மறைமலைநகர் அருகே கோகுலாபுரம் ஏரியில் வைத்து , கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (27), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தில்கேஷ் குமார் (27), மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நண்பர்கள் விக்னேஷை மது அருந்த அழைத்துள்ளனர். மது அருந்தும்போது, நண்பர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த விஸ்வநாதன் அரிவாளை எடுத்து வந்து விக்னேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். இதன் பின் நண்பர்கள் சேர்ந்து ஏரிக்கரையில் குழி தோண்டி விக்னேஷ் உடலை புதைத்தாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக 3 பேரை காவல் துறை கைது செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஸ்வநாதன் மேல் ஏற்கனவே கொலை முயற்சி, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. விக்னேஷின் உடல் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்த பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.