வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் - கூலிக்கு ஆள் அமர்த்தி ஆசிட் அடிக்க சொன்ன காதலி
தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டதால் கோபமடைந்த காதலி, தனது காதலனின் முகத்தை சிதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி
டெல்லி நிகல் விகார் பகுதியை சேர்ந்தவர் ஓம்கார் (24). இவர் கிராபிக் டிசைனர் ஆக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 19 ம் தேதி இவர் ரங்கோலா பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியால் அவர் முகத்தை கிழித்து தாக்கியுள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன், துவாரகா மோர் பகுதியில் சுற்றிய விகாஷ் என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இரு நண்பர்களுடன் சேர்ந்து ஓம்காரை தாக்கியதை ஒப்புக் கொண்டார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒரு பெண் தான் தாக்குதல் நடத்த சொன்னதாக காவல் துறை விசாரணையில் தெரிவித்துள்ளார். இவர்கள் தெரிவித்த தகவல் அடிப்படையில் திலக் நகர் மெட்ரோ ஸ்டேஷன் அருகே பெண் ஒருவரை கைது செய்தனர்.
ஆசிட்
அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் ஓம்கார் தன்னுடன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும், அந்த பெண் ஓம்காரை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் 3 ஆண்டுகளாக காதலித்து நெருக்கமாகவும் பழகி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஓம்காருக்கு வேறு ஒரு பெண்ணுடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் ஆனது.இதற்கு அந்த காதலி, என்னுடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக கூறினால் , நான் என்ன செய்வது என கேட்டுள்ளார்.
ஆனால் நிச்சயத்துக்கு தடையாக இருந்தால் அந்தரங்க படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என ஓம்கார் மிரட்டியதால் ஆத்திரம் அடைந்த காதலி 3 நபர்களை ரூ30,000 க்கு கூலிக்கு அமர்த்தி ஆசிட் பாட்டிலை கொடுத்து ஓம்காரின் முகத்தை சிதைக்க சொல்லியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அவர்களால் திட்டமிட்டபடி முகத்தில் ஆசிட் அடிக்க முடியாததால் கத்தியால் முகத்தை கிழித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.