ISRO: கடலில் விழுந்த கலன்; மீட்டு சென்னை கொண்டு வரும் கடற்படை - எதற்காக?
வெற்றிகரமாக வங்கக்கடலில் விழுந்த ககன்யான் மாதிரி கலன் சென்னை துறைமுகம் கொண்டுவரப்படுகிறது.
ககன்யான் திட்டம்
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ளன. எனவே இந்த சாதனையை இந்தியாவும் எட்ட கடந்த 2014ல் இத்திட்டத்துக்கு 'ககன்யான்' என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதன் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டுவருவதே இந்த திட்டத்தின் நோக்கம். இதற்கான முதல்கட்ட சோதனைகள் இன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. மனிதர்களை ஏற்றிச் செல்லும் மாதிரி கலன் (Crew Module) ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டால், இந்த கலனை எப்படி பத்திரமாக மீட்பது என்பதுதான் சோதனை.
மாதிரி கலனை ஏந்திக்கொண்டு TV-D1 ராக்கெட் 17 கி.மீ உயரத்திற்கு ஒலியை விட 1.5 மடங்கு வேகத்தில் பறக்கும். அங்கிருந்து மாதிரி கலன் மட்டும் தனியாக பிரிந்து வங்கக்கடலை நோக்கி வரும். கடலுக்கும் கலனுக்கும் சுமார் 2 கி.மீ தொலைவு இருக்கும் போது கலனில் உள்ள பாராசூட் விரிந்து கலனின் வேகத்தை குறைக்கும்.
சென்னை வரும் கலன்
இதில் மொத்தம் 10 பாராசூட்கள் இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு வகையான பாராசூட் விரியும். இப்படியாக வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து 10 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் பாதுகாப்பாக இந்த கலன் தரையிறங்கும்.
அங்கு கடற்படையினர் இந்த கலனை மீட்டு கரைக்கு கொண்டு வருவார்கள். இதுதான் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனையாகும். இந்த சோதனைக்காக இன்று காலை 10 மணிக்கு வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து ஏவப்பட்ட ராக்கெட்டிலிருந்து மாதிரி கலன் வெற்றிகரமாக பிரிந்து கடலை நோக்கி தரையிறங்கியது.
இந்த கலனை கடற்படையினர் மீட்டு இன்று மாலை சென்னை துறைமுகத்திற்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த கலனை சென்னையிலிருந்து, இஸ்ரோவின் ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு கலனை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மற்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.