ஈரானில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் - வான் எல்லைகளை மூடிய அண்டை நாடுகள்
ஈரானின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் தாக்குதல்
ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்களின் தலைவர்களை சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் கொன்றது. இதனால் ஆத்திரமடைந்த ஈரான், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசியது.
பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேலின் அயன் டோம் சாதனங்கள் இடைமறித்து அழித்தன. எனினும், சில ஏவுகணைகள் இஸ்ரேல் பகுதியில் விழுந்தன.
இஸ்ரேலின் தாக்குதல் திட்டம்
இந்த தாக்குதலுக்கு ஈரான் பெரிய அளவில் விலை கொடுக்கும் என இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்தார். பெரிதாக ஆயுத தாக்குதல் நடத்தவிட்டாலும் ஈரானின் அரசு இணையதளங்கள் மீது சைபர் தாக்குதலை நடத்தியது.
சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவது தொடர்பான அமெரிக்க உளவுத்துறையின் ராணுவ ஆவணங்கள் கசிந்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த ஆவணங்களில், ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் விமானப்படை தயாராவது, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஒத்திகை பார்ப்பது போன்ற படங்கள் அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்டிருந்தது. மற்றொரு ஆவணத்தில், ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவ சொத்துக்களை மூலோபாய இடங்களுக்கு நகர்த்த இஸ்ரேல் மேற்கொள்ளும் முயற்சிகளை காட்டுகிறது.
இஸ்ரேலின் பதிலடி
இந்நினையில் இன்று ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகளை துல்லியமாக குறி வைத்து வான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் என தெரிவித்துள்ள இஸ்ரேல் மீண்டும் ஈரான் தாக்க முயன்றால் இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்" என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, ஈரான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகள் அணைத்து விமானங்களையும் ரத்து செய்து விட்டு காலவரையின்றி தனது வான் எல்லைகளை மூடியுள்ளது. தற்போது ஈரானின் ராணுவத் தளபதிகளின் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.