உறுதியளித்த இஸ்ரேல்; மொத்த பார்வையும் ஹமாஸ் மேல்.. காத்திருக்கும் உலக நாடுகள்!
சமரசம் செய்யும் பைடன் அரசின் நடவடிக்கைக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
போர் நிறுத்தம்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தனர்.
தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இரு தரப்பினரும் செவிசாய்த்தபாடில்லை. இந்நிலையில், இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்துப் போர் நிறுத்தம் தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இஸ்ரேல் ஒப்புதல்
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “போர்நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்தைப் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார். ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் பிணையக் கைதிகளை விடுவித்தால் போர் நிறுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் உறுதியளித்தார்.
ஹமாஸ் அமைப்பும் இதனை ஏற்றுக்கொண்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போர் நிறுத்தத்தை உடனடியாக அமலாக்க அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, ஹமாஸ் அமைப்பின் முடிவைப் பொறுத்தே, போர் நிறுத்தப்படுமா? அல்லது தொடருமா? என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது.