அமித் ஷாவின் தமிழக சுற்றுபயணம் திடீர் ரத்து - நள்ளிரவில் ட்ரோன் பறந்தது தான் காரணமா?
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொள்ள இருந்த தமிழக சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் சுற்றுபயணம்
நடப்பாண்டில் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் தங்களது தீவிர பரப்புரையை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்தில்,சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் போட்டியிடும் அக்கட்சியில் கூட்டணி வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அமித் ஷாவின் தமிழக சுற்றுப்பயண் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனால் அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து என சொல்லப்பட்டது. ஆனால், அமித் ஷாவின் சுற்றுப்பயணம் ரத்து ஆனதற்கு காரணம் மதுரையில் ட்ரோன் பறந்தது தான் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
திடீர் ரத்து
அமித் ஷா மதுரை பழங்காநத்தத்தில் பங்கேற்க இருந்த பொதுக்கூட்ட மேடை பகுதியில் நள்ளிரவில் ட்ரோன் பறந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸாருக்கு பாஜகவினர் தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ட்ரோன் பறக்க விட்டவர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள், மதுரை குறித்து குறும்படம் எடுப்பதற்காக காவல் நிலையத்தில் அனுமதி கேட்டுள்ளனர்.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிகழ்ச்சியால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, நள்ளிரவில் அவர்கள் ட்ரோன் மூலம் பழங்காநத்தம் பகுதியை படம்பிடிக்க ட்ரோனை பறக்கவிட்டதாக கூறினர்.
இது குறித்த போலீஸார் விசாரணை நடத்தியதில், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த சத்தியநாராயணன், மதுரை மேலபொன்னகரத்தைச் சேர்ந்த நவீன்குமார், இஷாத் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், மூவரையும் கைது செய்து ட்ரோனை பறிமுதல் செய்தனர்.