என்கவுண்டர் வழக்கு முதல் மத்திய அமைச்சர் வரை : அமித்ஷாவின் அரசியல் வரலாறு
பாஜகவின் முக்கிய முகமாக இன்னும் சொல்லப்போனால் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக பாஜகவில் செல்வாக்கு உள்ள நபராக கருதப்படும் அமித்ஷா. பாஜகவின் முக்கிய முகமாக மாறியது எப்படி காண்போம் இந்த தொகுப்பில்.
மும்பை அமித்ஷா
1964ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த அமித் ஷா, சிறு வயதிலேயே ஏ.பி.வி.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளில் பொறுப்பு வகித்தார். அங்கிருந்துதான் அமித் ஷாவின் அரசியல் வாழ்க்கைத் தொடங்கியது. ஏபிவிபி தொண்டராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அமித் ஷா, இன்று பாஜகவின் முக்கிய தலைவராக இருந்தாலும் அவரின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கை அவ்வுளவு எளிதாக இருக்கவில்லை.
மோடியின் தளபதி
1985-ம் ஆண்டில் பாஜகவில் நரேந்திர மோடி களமிறங்கிய பிறகு அவருக்குக் கீழ் இளைஞர் அணிப் பிரிவில் பணியாற்றினார் அமித் ஷா. 1991-ம் ஆண்டில் தொடங்கி குஜராத்தில் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் அத்வானிக்காக தேர்தல் முகவராக அமித் ஷா பலமுறை பணியாற்றியிருக்கிறார். இதன்மூலம் அத்வானியுடன் அமித் ஷாவுக்கு நல்ல அறிமுகம் உண்டு.
இப்படித்தான் மோடியுடனும் நெருக்கம் ஏற்பட்டது. 1990 காலக்கட்டத்தில் குஜராத்தில் மோடியும், அமித் ஷாவும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். மோடியை விட 14 வயது இளையவரான அமித் ஷா, அப்போதிருந்தே மோடியின் கருத்தைப் பிரதிபலிப்பவராக நரேந்திரமோடியின் தளபதியாகவே இருந்தார் என்றே கூறலாம்
என்கவுண்டர் வழக்கு
2005-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி சோரப்தீன் ஷேக் என்பவரை குஜராத் போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட என்கவுன்டர் என்று சோரப்தீன் ஷேக்கின் சகோதரர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் 2010ம் ஆண்டு, அமித்ஷா மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கும் இந்த என்கவுண்டருக்கும் தொடர்பு இருக்கிறது என்று சிபிஐ கூறியது.
இதையடுத்து அமித் ஷா தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார். எனவே அமித்ஷா கைது செய்யப்படுவார் என்று பரபரப்பு எழுந்தது. இதனால், அமித் ஷா சில மாதங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். இறுதியாக 2010-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அமித் ஷாவுக்கு ஜாமீன் வழங்கியது. இறுதியில் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு பிறகு, 2014 டிசம்பர் 30ஆம் தேதியன்று போலி என்கவுண்டர் வழக்கில் இருந்து அமித் ஷாவை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.
அமித்ஷா வியூகம்
2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு உத்தரப்பிரதேசத்தில் 71 தொகுதிகள் கிடைத்தன. கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் தலா 10 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்த பாஜக, அப்போது மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை அள்ளியது. மோடி அலைக்கு கிடைத்த வெற்றியாக இது இருந்தாலும், இதன் பின்னணியில் முழுக்க முழுக்க இருந்தவர் அமித் ஷாதான். உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவுக்குப் புது ரத்தம் பாய்ச்சியதில் அமித்ஷாவுக்கு முக்கியப் பங்கு உண்டு.
மத்திய அமைச்சர் அமித்ஷா
பிரதமராக மோடி பதவியேற்ற உடன், டெல்லியிலும் அவருக்கு அருகில் அமித் ஷா இருக்கும்படி பார்த்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து அமித் ஷாவுக்கு தேசிய தலைவர் பதவி கிடைத்தது. தேசிய தலைவராக இருந்து பாஜக பெரும்பாலான மாநிலங்களில் ஆழமாக காலுன்ற காரணமாக இருந்தார் அமித் ஷா. 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க 303 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியினை பிடித்தது , தேர்தலுக்கு முன்னதாக அமித்ஷாவிடம் செய்தியாளர்களிடம் பேசும் போது 2019 தேர்தலுக்கான தயாரிப்புகளை நாங்கள் 2014 மே 27 முதலே தொடங்கிவிட்டோம்' என்று அதிரடியான பதிலை அளித்தார் அமித் ஷா. அவரது திட்டமிடல் வியூகம் எவ்வளவு ஆச்சரியமானது என்பதை இதன்மூலம்தெரிந்து கொள்ளலாம்.
தொடர் வெற்றிக்குப் பரிசாக, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜக முன்னணியில் உள்ளது, அதே சமயம் சில சமயங்களில் மாநில கட்சிகளில் நிலவும் குழப்பங்களை நீக்கி கட்சியினையும் கொள்கையினையும் வளர்த்தெடுப்பதில் அமித்ஷாவின் தனி பாணி என்றே கூறலாம் , இவரின் இந்த வியூகம் தான் பாஜகவின் மீது பல விமர்சனங்கள் விழும் போதும் அமித்ஷாவின் தொலைநோக்கு பார்வை , திட்டங்கள் ஆகியவை பாஜகவின் தாமரை சின்னத்தை பொலிவுடன் வளர செய்கின்றன.
அதற்கு உதாரணம் தான் குஜராத் மோர்பி பாலம் விபத்து இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது ,ஆனால் அதே இடத்தில் பாஜக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது இதற்கு அமித்ஷாவின் வெற்றி வியூகங்கள் காரணமாக கூறப்படுகின்றது.
அதே சமயம் வட மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் பாஜக. தென் பகுதியில் கர்நாடகாவில் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பெரும் வரவேற்பை பெற முடியவில்லை குறிப்பாக தமிழகத்தில் பாஜக ஆளும் கட்சியை எதிர்ப்பதாக கூறப்பட்டாலும் மக்களின் நம்பிக்கையினை பெற முடியவில்லை , வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவின் தாக்கம் எப்படி இருக்கும் , அமித்ஷாவின் வியூகம் பலிக்குமா? தமிழகத்தில் தாமரை மலருமா ? இதற்கான பதிலை காலம்தான் கூற வேண்டும்.