கைக்கு எட்டாத கோப்பை - பெயரை மாற்றும் RCB..? ரிஷப் ஷெட்டி வைரல் வீடியோ
பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட போதிலும் இது வரை ஒரு முறை கூட RCB அணி கோப்பையை வெல்லவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பெங்களூரு அணி சென்னை, மும்பை அணிகளுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது.
ஆனால், கோப்பையை வெல்ல முடியாமல் இது வரை அந்த அணி பெரும் சோகத்தை எதிர்கொண்டு வருகின்றது. 2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி இறுதி போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
கிரிக்கெட் உலகில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வரும் விராட் கோலி, தொடர்ந்து ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும் நிலையில், அவரது ரசிகர்களையும் கோப்பை கனவு வாட்டி வருகின்றது. இந்த சூழலில் தான் இந்த ஆண்டு முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியை எதிர்கொள்கிறது ஆர்.சி.பி அணி.
ஐபிஎல் தொடர் முன்னிட்டு புதிய ப்ரோமோஷன் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பெயர் மாற்றப்படுகிறது..?
காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி நடித்துள்ள இந்த வீடியோவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என 3 காளைகள் நிற்க, அதில் கடைசியாக இருக்கும் பெங்களூரு என்ற காளையை மட்டும் "இது வேண்டாம் கூட்டி போ" என ரிஷப் சொல்லி, ரசிகர்களை பார்த்து என்ன சொல்றேன்னு புரியுதா..? என கன்னடத்தில் கேட்டார்.
இதனை வைத்து ரசிகர்கள் அணியின் பெயர் மாற்றப்படுகிறது என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட துவங்கி விட்டனர். RCB unboxing என்ற பெயரில் இது குறித்தான விளக்கம் வரும் 19-ஆம் வெளிவரும் என்று வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.