அதிர்ச்சியில் உறைந்த ரயில் பயணிகள்.. முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம் - என்ன காரணம்?
ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஐஆர்சிடிசி
மனிதர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் போக்குவரத்து என்றால் அது ரயில்தான். வெளிமாநிலம், வெளியூர், வேலைக்கு, சரக்கு ஏற்றிச் செல்ல என ரயில்களை நாம் அன்றாடமாக பயன்படுத்தி வருகிறோம். அதுவும் பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகளவு பயணிக்க நேரிடும்.
குறைந்த செலவில், அதிக வசதிகளுடன் பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு ரயில்களே சரியான தேர்வாக உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை நேரடியாக டிக்கெட் கவுண்டர்களில் மட்டுமல்லாமல் இணையதளம் மூலம் ஆன்லைனிலும் அதிகளவில் பெற்று வருகின்றனர்.
குறிப்பாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு 82 சதவீத்துக்கும் மேல் நடக்கிறது. அதுமட்டுமின்றி, டிக்கெட், உணவு ஆர்டர் செய்வது, அறைகள் முன்பதிவு உள்பட பல வசதிகளுடன் செயல்படுகிறது.
என்ன காரணம்?
ஆனாலும், இந்த இணையதளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது. செயலியிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் திக்குமுக்காடி போகினார்கள்.
அதிலும், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வோர், கடும் அவதிப்பட்டனர். அந்த வகையில், இன்று காலை 10 மணியளவில் மீண்டும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது. தற்போது அரையாண்டு விடுமுறை மற்றும் ஆண்டு இறுதி என்பதால் பொது மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.
இதற்கு ரயில்களில் தட்கல் முறையில் முன்பதிவு செய்து வருகின்றனர். இப்படிபட்ட இக்கட்டான சூழலில் திடீரென இணையதளம் முடங்கி இருப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. எனினும், பராமரிப்பு பணிகள் காரணமாக இணையதளம் முடங்கியுள்ளது என்று அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.