உச்சகட்ட பதற்றம்; இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் - போர்கப்பல்களை அனுப்பும் அமெரிக்கா
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவும், இஸ்ரேலும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதால் போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது.
ஹமாஸ்
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியதில் இருந்து பாலஸ்தீனிய பகுதியான காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 40,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி ஃபுவாட் ஷுக்ர் இஸ்ரேலிய விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன் பின் சில மணி நேரங்களில் ஈரான் புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வுக்கு சென்றிருந்த ஹமாஸ் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.
ஈரான்
ஈரானில் வைத்தே இந்த சம்பவம் நடந்துள்ளதால் ஈரானை கொந்தளிக்க வைத்து. டெஹ்ரானில் வியாழக்கிழமை ஹனியேவின் இறுதிச் சடங்கின் போது நடந்த பிரார்த்தனைக்கு இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தலைமை தாங்கினார். ஹனியே கொலைக்கு இஸ்ரேல் "கடுமையான தண்டனையை" அனுபவிக்கும் என்று அவர் ஏற்கனவே சபதம் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து, நேற்று லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேலின் பெய்ட் ஹில்லெல்லை குறி வைத்து, 25 நிமிடங்களுக்கு மேலாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. தாக்குதலை முன்கூட்டியே அறிந்த இஸ்ரேல் படை வான்வெளி தாக்குதலை தடுக்கும் டோம் அமைப்பை பயன்படுத்தி இந்த தாக்குதலை தடுத்துள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
லெபனான்
ஆனால் இதற்கு பதிலடியாக, லெபனான் நாட்டின் கேஃபர் கிளா மற்றும் டெய்ர் சிரியனி உள்ளிட்ட இடங்களை குறி வைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக உள்ளதால் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரிட்டன், மற்றும் அமெரிக்கா தங்களது போர் கப்பல்களை அனுப்பியுள்ளது.
மேலும் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.