ஹமாஸ் தலைவர் படுகொலை; பழி வாங்குவோம் என எச்சரித்த ஈரான் - திசை மாறும் இஸ்ரேல் போர்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டுள்ள சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்மாயில் ஹனியே
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது.
30.07.2024 அன்று ஈரானின் புதிய அதிபராக மசூத் பெசஷ்கியான் பதவியேற்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். இதில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் கலந்து கொண்டுள்ளார்.
ஈரான் எச்சரிக்கை
இந்த விழாவில் கலந்து கொண்டு திரும்பிய பின், அவரது இல்லத்தின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டதக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.
மேலும், இஸ்மாயில் ஹனியே எங்களுடைய விருந்தாளி. இவர் பல ஆண்டுகளாக இந்த கண்ணியமான போரில் தனது கெளரவமான வாழ்க்கையை தியாகம் செய்ய தயாராக இருந்தார். அவரை இஸ்ரேல் கொன்றுவிட்டது. இஸ்ரேலை பழிவாங்குவதை நாங்கள் எங்கள் கடமையாகக் கருதுகிறோம். என ஈரானின் தலைவர் அயதுல்லா அலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு இலங்கை, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போர் இஸ்ரேல் ஈரான் யுத்தமாக மாற வாய்ப்புள்ளதென சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.