போட்டியில் தோற்றால் என்ன? நாய் அப்படி தான் இருக்கும் - எம்.எஸ்.தோனி பளீச்!
சென்னை உடனான பந்தம் நீடிக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதனிடையே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூருவிடம் தோற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. மேலும், தற்போது எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்த பேச்சுகளும் அதிகமாகியுள்ளது.
பந்தம் நீடிக்கும்
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய தோனி "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சித்தேன். விவசாயம், பைக் ஓட்டுவது, பழைய கார்களை ரசிப்பது போன்றவை மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உதவியது.
நாய். பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்கிறேன். இவை எப்போதும் அன்பாக இருக்கும். நான் போட்டியில் தோற்று வந்தாலும், என் நாய் அதே அன்புடன் பழகும். யாரிடமும் மரியாதையை எதிர்பார்க்க கூடாது.
அது தானாக கிடைக்க வேண்டும். சென்னை அணியுடனான உறவு உணர்வுபூர்வமானது. 2 மாதம் சென்னை வந்து விளையாடி விட்டு மீண்டும் ராஞ்சி செல்வது போல கிடையாது. சென்னை உடனான பந்தம் நீடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.