அறிமுகமாகிறது பிங்க் ஆட்டோ..200 பெண் ஓட்டுநர்கள் - தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிங்க் ஆட்டோ வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
பிங்க் ஆட்டோ..
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்துடன் தொடங்கின பேரவை, துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை குறித்த விவாதத்தில் முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார்.
இந்த நிலையில், சென்னை மாநகரத்தில், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும், அரசு மானியமாக தலா ரூ.1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி,
அரசு அறிவிப்பு
ரூ.2 கோடி செலவில் 200 இளஞ்சிவப்பு ஆட்டோக்களை (பிங்க் ஆட்டோ) இயக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மாநகரத்தில் ரெயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ஆட்டோக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன்
பயணம் செய்ய ஏதுவாக தனி வண்ணம் கொண்ட பெண்களுக்கான உதவி எண் மற்றும் இருப்புநிலைகலன் அமைப்பு (ஜிபிஎஸ்) பொருத்தப்பட்டு காவல்துறை மூலம் கண்காணிக்கப்படும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோ நடைமுறைப்படுத்தப்படும்.
வாகனம் ஓட்டுவதில் உரிமம் பெற்ற ஆர்வமுள்ள 200 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ஆட்டோவின் மொத்த விலையில் ரூ.1 லட்சம் அரசால் மானியமாக வழங்கப்படும். கடன் உதவிக்காக தேசியமயமாக்கப்பட்ட அல்லது இதர வங்கிகளுடன் இணைக்கப்படுவார்கள்.