டாஸ்மாக் விவகாரம்; வரம்புகளை மீறிவிட்டது ED - தடை போட்ட உச்சநீதிமன்றம்!
அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் விவகாரம்
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில், டாஸ்மாக்கில் ₹1000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. ஆனால், இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இடைக்கால தடை
அப்போது, மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தும்போது, அமலாக்கத்துறை இந்த வழக்கை ஏன் விசாரணை செய்ய வேண்டும். அமலாக்கத்துறை இந்த வழக்கில் அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுகிறது.
தனி நபர் வழக்கு என்பது வேறு. ஆனால் நிறுவனத்திற்கு எதிராக எவ்வாறு கிரிமினல் வழக்கை பதிவு செய்ய முடியும்? அமலாக்கத்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
டாஸ்மாக் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாக நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.