ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த சுவாரசியமான சாதனகைள்

dhoni kholi McCullum gayle
By Jon Apr 10, 2021 03:30 AM GMT
Report

கடந்த 13 ஆண்டு ஐபிஎல் தொடரில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரின் 14வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் முபை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் நிகழ்த்தப்பட்ட சுவாரசியமான சாதனைகளை பட்டியலிட்டுள்ளோம்.

அதன்படி 2013-ம் ஆண்டு புனே வாரியர்சுக்கு எதிராக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 263 ரன்கள் குவித்ததே ஒரு அணியின் அதிகபட்சமாகும். இதே பெங்களூரு அணி 2017-ம் ஆண்டில் கொல்கத்தாவுக்கு எதிராக 49 ரன்னில் சுருண்டது மோசமான ஸ்கோராகும். இதுவரை 63 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதிக சதங்கள் நொறுக்கியவர்களின் பட்டியலில் கிறிஸ் கெய்ல் (6 சதம்) முதலிடத்தில் உள்ளார்.

பெங்களூரு கேப்டன் விராட் கோலி 5 சதத்துடன் 2-வது இடம் வகிக்கிறார். ஐ.பி.எல். வரலாற்றில் முதல் சதத்தை அடித்தவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் பிரன்டன் மெக்கல்லம். 2008-ம் ஆண்டில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக அவர் 158 ரன்கள் திரட்டினார். அதன் பிறகு இந்த நாள் வரைக்கும் கொல்கத்தா அணி வீரர் யாரும் சதம் அடித்ததில்லை என்பது ஆச்சரியமான உண்மையாகும்.

தற்போது பஞ்சாப் கிங்சுக்காக ஆடும் கிறிஸ் கெய்ல் முன்பு பெங்களூரு அணிக்காக 175 ரன்கள் (2013-ம் ஆண்டில் புனே வாரியர்சுக்கு எதிராக) விளாசியதே தனிநபர் அதிகபட்சமாகும். இதில் 30 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த போது, அதிவேக சதமாகவும் பதிவானது. சிக்சர் மன்னனாகவும் 41 வயதான கிறிஸ் கெய்ல் வலம் வருகிறார். அவர் 349 சிக்சருடன் (132 ஆட்டம்) அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.

இந்த வகையில் பெங்களூரு அணி வீரர் டிவில்லியர்ஸ் (235 சிக்சர்) 2-வது இடத்திலும், சென்னை கேப்டன் டோனி (216 சிக்சர்) 3-வது இடத்திலும் உள்ளனர். 2016-ம் ஆண்டில் விராட் கோலி 973 ரன்கள் குவித்ததே ஒரு ஐ.பி.எல். சீசனில் எடுக்கப்பட்ட தனிநபரின் அதிக பட்ச ரன்னாகும். இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ள சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் ரன் விட்டுக்கொடுக்காமல் அதிகமான பந்துகளை வீசியவர் என்ற சிறப்புக்குரியவர் ஆவார்.

அவர் 1,249 ‘டாட்பால்’ வீசியுள்ளார். 19 ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாதனை படைக்கப்பட்டுள்ளன. டெல்லி அணிக்காக ஆடும் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார். கடந்த ஆண்டு கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 2 ஓவர்களில் ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டனாக வீசினார். ஐ.பி.எல்.-ல் ஒரு ஆட்டத்தில் 2 மெய்டன் ஓவர்கள் வீசிய ஒரே பவுலர் இவர் தான்.