மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை - கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ராணுவ வீரர் படுகொலை
மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய குழு தாக்கியதில் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
மணிப்பூர்
மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் மத்திய, மாநில கூட்டு காவல் படை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜிரிபாம் மாவட்ட அஸ்ஸாம் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் ரோந்து காரை நிறுத்திவிட்டு, சிஆர்பிஎப் வீரர் ஒருவர் நடந்து சென்றுள்ளார்.
அங்கு மறைந்திருந்த கிளர்ச்சியாளர்கள் அப்போது, ரோந்து வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், காருக்கு வெளியே நடந்து கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார். மேலும், காரின் கதவுகளில் குண்டுகள் துளைத்ததில், காரில் இருந்த காவலர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
துப்பாக்கி சூடு
காயமடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜிரிபாம் காவல் நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள மோங்பங்கில் காலை 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் சார்பில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
ஆனால் அவர்கள் தப்பி ஓடி அஸ்ஸாம் எல்லையோரம் இருந்த காட்டில் பதுங்கிவிட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜய் குமார் ஜா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே இனப்பிரச்சனை காரணமாக வன்முறை நடைப்பெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு மணிப்பூர் மாநில முதல்வர் பீரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.