ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் .. முதலீடுகளின் நிலை என்ன?அன்புமணி கேள்வி
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
முதலீட்டாளர்கள் மாநாடு
3 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகளின் தற்போதைய நிலை என்ன? என பாமக தலைவர் அன்புமணி தமிழக அரசிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், வரும் 27-ம் தேதி முதல்17 நாட்களுக்கு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் முதலீடுகளை ஈர்க்க செய்யப்பட்ட முயற்சிகளின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழகஅரசின் கடமையாகும்.
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச்சில் 4 நாள் பயணமாக துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள நிறுவனங்களிடம் நடத்தியபேச்சுவார்த்தையின் அடிப்படையில்,
மொத்தம் ரூ.6,100 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ஆனால், அந்த நிறுவனங்களிடமிருந்து எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை. அதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
தற்போதைய நிலை ?
ஜனவரி மாத இறுதியில் முதலீடு திரட்டுவதற்காக, ஸ்பெயின் நாட்டுக்கு முதல்வரும், குழுவினரும் சென்றனர். இந்தபயணத்தின் நிறைவில், மொத்தம் ரூ.3,440 கோடி தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டதாக முதல்வர் கூறியிருந்தார். ஆனால், 7 மாதங்களாகி விட்ட நிலையில் ஒருபைசா கூட அங்கிருந்து வரவில்லை.
எனவே, கடந்த 3 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ.9.74 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் இப்போது எந்த நிலையில் உள்ளன? தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த தொழில் திட்டங்கள் எத்தனை?
அவற்றின் முதலீடு எவ்வளவு? அடிக்கல் நாட்டப்பட்ட தொழில் திட்டங்கள் எத்தனை? அவற்றின் மதிப்பு எவ்வளவு? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.