ஸ்பைடர் ட்வின்ஸ் - 4 கை 3 கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை !!
இந்தோனேசியா நாட்டில் மிகவும் அரிதான நிகழ்வாக நான்கு கைகள், மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. இஸ்கியோபகஸ் டிரிபஸ்(Ischiopagus Tripus) என அறிவியல் ரீதியாக அழைக்கப்படும் இந்த இரட்டையர்கள் மிகவும் அரிதாக இரண்டு மில்லியன் பிறப்புகளுக்கு ஒருமுறை மட்டுமே பிறக்கின்றனர்.
பேச்சுவழக்கில் இப்படி பிறப்பவர்களை "ஸ்பைடர் ட்வின்ஸ்" (Spider Twins) என குறிப்பிடுகிறார்கள். வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் சிலது மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கேஸ் ரிப்போர்ட் தளத்தில் இந்தோனேசிய சிறுவர்கள் குறித்து தகவல் வெளியாக உலகம் முழுவதும் இது கவனம் பெற்றுள்ளது.
இக்குழந்தைகள் 2018 ஆம் ஆண்டில் பிறந்துள்ளார்கள். அறுவை சிகிச்சையிலும் இம்மாதிரியான குழந்தைகள் அதிக சிக்கலான தன்மை கொண்டதாக அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கேஸ் ரிப்போர்ட்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. காரணம், இக்குழந்தைகள் உடலின் மேற்பகுதியில் அல்லாமல், உடலின் கீழ் பாதியில் இணைந்திருக்கிறார்கள்.
இவர்களின் தனித்துவமான உடல் அமைப்பு காரணமாக, பிறந்த மூன்று ஆண்டுகளுக்கு இவர்களால் உட்கார முடியாமல் படுத்த நிலையிலேயே இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு அறுவைசிகிச்சையின் மூலம் மூன்றாவது கால் நீக்கப்பட்டுள்ளது.
அதே போல, சுதந்திரமாக நிமிர்ந்து உட்காருவதற்கு அவர்களின் இடுப்பு மற்றும் கால்களையும் சிகிச்சையின் மூலம் வலுப்படுத்தியுள்ளார்கள். இருப்பினும் இவர்கள் ஒட்டிப்பிறந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.