சென்னை டூ மதுரை 45 நிமிட பயணம் - மிரட்டும் சென்னை ஐஐடியின் ஹைபர்லூப் ரயில்
ஹைபர்லூப் ரயிலின் சோதனை குழாய் வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
இந்திய ரயில்வே
இந்தியாவின் பொதுப்போக்குவரத்தில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் ரயில் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.
மக்களின் பயண நேரத்தை குறைக்க, அதிவேக ரயில்களை தயாரிக்கும் திட்டத்தில் இந்திய ரயில்வே துறை மிக தீவிரமாக உள்ளது. ஏற்கனவே மும்பை - அஹமதாபாத்திற்கு இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கான பணியை ரயில்வே நிர்வாகம் தொடங்கி உள்ளது.
ஹைப்பர்லூப் ரயில்
புல்லட் ரயில் மணிக்கு 450 கிமீ வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹைபர்லூப் ரயில் மணிக்கு 1100 கிமீ வேகத்தில் பயணிக்கும் என கூறப்படுகிறது.
இதனை சோதனை செய்ய இந்திய ரயில்வே, சென்னை ஐஐடியின் அவிஷ்கர் ஹைப்பர்லூப் குழு, ஸ்டார்ட் அப் நிறுவனமான TuTr இணைந்து சென்னையில் 410 மீட்டருக்கு சோதனை குழாய் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில்விரைவில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
4,050 கி.மீ நீளம்
ஹைப்பர் லூப் ரயில் என்பது ஒரு வெற்றிட குழாயில் அதிவேகத்தில் ரயில் பயணம் செய்யும் முறையாகும். இதில் காற்று, பயண வேகத்தை குறைக்கும் வாய்ப்பும் குறைவாகும். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு 30 நிமிடங்களில் சென்று விடலாம். அதாவது தமிழ்நாட்டில் சென்னை டூ மதுரை வரையிலான தூரத்தை 45 நிமிடங்களில் அடைந்து விட முடியும்.
The hyperloop project at @iitmadras; Government-academia collaboration is driving innovation in futuristic transportation. pic.twitter.com/S1r1wirK5o
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) February 24, 2025
சோதனை முடிந்து வணிக பயன்பாட்டுக்கு வரும் போது இதன் பாதை 4,050 கி.மீ. நீளமாக இருக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் ஹைப்பர் லூப் ரயில் சோதனை பாதையின் வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.