சுவிஸ் வங்கிகளில் குறையும் இந்தியர்களின் பணம் - 4 ஆண்டுகளில் 70 சதவீதம் சரிவு
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடு வெகுவாக குறைந்துள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து வங்கி
சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பெருமளவு பணம் டெபாசிட் செய்து வைத்துள்ளனர். வங்கிகள் ஆண்டுதோறும் முதலீடு உள்ளிட்ட நிதி நிலை விவரங்களை சுவிட்சர்லாந்து மத்திய வங்கிக்கு வழங்குகின்றன. இதன் அடிப்படையில் சுவிஸ் வங்கி 2023ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் மேற்கொண்டுள்ள டெபாசிட் தொகை கடந்த 2023ம் ஆண்டில் இந்திய மதிப்பில் ரூ.9,771 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இந்த டெபாசிட் தொகை 70 சதவீதம் குறைவு, என தெரிவித்துள்ளது.
கருப்பு பணம்
2006ம் ஆண்டு இந்த தொகை ரூ.6,10,427 கோடியாக இருந்தது. அதன் பின் படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் 2021 ல் இந்த தொகை ரூ.36,000 கோடியாக அதிகரித்து இருந்தது. இது இந்தியர்கள் சுவிட்சர்லாந்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கருப்பு பணம் கிடையாது, அங்குள்ள வங்கிகள் மற்றும் இந்தியாவில் உள்ள சுவிஸ் வங்கி கிளைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் கருப்புப் பணத்தை பதுக்கி வைக்கும் நாடாக சுவிட்சர்லாந்து, கருதப்பட்டு வருகிறது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தை மீட்க பாஜக அரசு 2015ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.