அந்த கறி சாப்பிடுறாங்க..அதனால தான் இப்படி பௌலிங் பண்றாங்க...சர்ச்சையை கிளப்பிய அப்ரிடி
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை குறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.
வேகப்பந்துவீச்சில் முன்னேறும் இந்தியா
துவக்கத்தில் சுழற்பந்துவீச்சில் தான் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி காலப்போக்கில், வேகப்பந்துவீச்சிலும் கணிசமான முன்னேற்றத்தை பெறத்துவங்கியது. தற்போதைய இந்திய அணியில் உலகின் நம்பர் ஒன் பவுலராக ஜொலிக்கும் முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி நட்சத்திரங்களாக திகழ்வது போல அர்ஷிதீப் சிங், பிரசித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக் போன்ற இளம் வீரர்கள் வருங்காலங்களில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக செயல்படுவார்கள் என நம்பப்படுகிறது.
இந்திய அணியின் இந்த அசாத்திய முன்னேற்றத்தை குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அப்ரிடி கருத்து
பேட்டி ஒன்றில் இது குறித்து அவர் பேசும் போது, “இந்தியாவில் 1.4 பில்லியன் மக்கள் தொகை இருக்கும் காரணத்தால் அவர்களின் விளையாட்டு தரமும் மாறி வருகிறது என கூறி, ஆரம்ப காலங்களில் இந்தியா சிறந்த பேட்ஸ்மேன்களையும் பாகிஸ்தான் சிறந்த பவுலர்களையும் உருவாக்குவதாக நாம் பேசினோம் என்றார்.
ஆனால் அதற்காக இருவருமே நல்ல பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களை சம அளவு உருவாக்கவில்லை என்று அர்த்தமல்ல என சுட்டிக்காட்டிய அப்ரிடி, இருப்பினும் தற்போது இந்திய பவுலர்கள் இறைச்சிகளை உண்ண துவங்கிய நிலையில் தான் அதிகப்படியான பலத்தையும் பெற்றுள்ளார்கள் என தெரிவித்தார்.
துவக்கத்தில் அணியில் கங்குலி மாற்றங்களை செய்த நிலையில் அதனை தோனி அப்படியே முன்னோக்கி எடுத்துச் சென்றார் என குறிப்பிட்டு, பிசிசிஐ'யும் உள்ளூர் கிரிக்கெட்டை ராகுல் டிராவிட் போன்றவர்களை பயிற்சியாளர்களாக நியமித்து முன்னேற்றுவதற்கான சரியான முதலீடுகள் செய்துள்ளது என்றார்.
தற்போது இந்தியா விரும்பினால் 2 அணிகளை விளையாட வைக்க முடியும் என்றும் அதே போல இந்திய அணியினர் தற்போது பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க துவங்கியுள்ளனர்” என்று அப்ரிடி கூறினார்.