இந்த நாட்டுக்கு செல்ல இந்தியர்களுக்கு விசாவே தேவையில்லையாம் - ஆனால் 4 கண்டிஷன்!
இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.
விசா தேவையில்லை
உலகின் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.
தங்களது நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் ஈரான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி 4ம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளது. ஆனால் விசா இல்லாமல் பயணிக்க 4 முக்கிய நிபந்தனைகளை ஈரான் அரசு அறிவித்துள்ளது.
4 நிபந்தனைகள்
1. சாதாரண பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம். எந்த காரணத்தைக் கொண்டும் 15 நாட்களுக்கு பிறகு கால நீட்டிப்பு கிடையாது.
2. அனுமதிக்கப்பட்ட நாட்களை விட அதிக காலம் ஈரானில் தங்குவதற்கு விரும்பினாலோ அல்லது 6 மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினாலோ அதற்கான உரிய விசா பெற வேண்டும்.
3. விசா இன்றி பயணம் என்ற நடைமுறையானது, சுற்றுலா வருவோருக்கு மட்டுமே பொருந்தும். 4. விசா இல்லாமல் வரலாம் என்ற இந்த அறிவிப்பு வான் எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.