கனடாவை ஒரேயடியாக ஒதுக்கும் இந்திய மாணவர்கள்; பல கோடி நஷ்டம் - என்ன காரணம்?
கனடாவுக்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இரு நாட்டு மோதல்
கனடாவில் இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் என்பவர் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
அதன்பின், இரு நாடுகளும் தூதர்களைத் திரும்பப் பெறுவது முதல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட மாணவர் பெர்மிட் 108,940இல் இருந்து 14,910ஆகக் குறைந்துள்ளது. ஒரே சமயத்தில் சுமார் 86% குறைந்துள்ளது.
பல கோடி நஷ்டம்
முன்னதாக, கனடாவுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம், கனடா ஆண்டுதோறும் சுமார் $16.4 பில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 133 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும். இது குறித்து கனடா அமைச்சர் மார்க் மில்லர் கூறுகையில்,
"தற்போதைய சூழலில் கனடாவுக்கு வரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை உடனடியாக அதிகரிக்காது என்றே நினைக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியாக இருக்கும் மோதல் என்பது தொடர்கிறது. இதனால் இந்தியாவில் இருந்து வரும் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு வரும் காலத்தில் எப்படிச் செல்லும் என்பதை என்னால் இப்போது சொல்ல முடியாது. அதிலும் போலீஸ் விசாரணை தொடர்ந்து நடக்கும் நிலையில், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. தற்போதைய சூழலில் இந்தப் பிரச்சினைக்கு எனக்கு ஒளி எதுவும் தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.