வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் இறப்பு; கனடாவில்தான் அதிகம் - என்ன காரணம்?
வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் அதிக அளவில் இறப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதிக இறப்பு
2018-ம் ஆண்டு முதல் குறைந்தது 403 இந்திய மாணவர்கள் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், கனடாவில் இருந்து 91 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இங்கிலாந்தில் 48 பேரும் ரஷ்யாவில் 40 மாணவர்களும் இறந்துள்ளனர். அமெரிக்காவில் 36 பேரும் ஆஸ்திரேலியாவில் 35 மாணவர்களும் உக்ரைனில் 21 மாணவர்களும் மரணத்தைத் தழுவி உள்ளனர்.
என்ன காரணம்?
ஜெர்மனியில் 20 மாணவர்களும் சிப்ரஸில் 14 மாணவர்களும் இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸில் தலா 10 மாணவர்களும் உயிரிழந்துள்ளதான தகவலை மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் அளித்துள்ளார்.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், அதிக அளவிலான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்கின்றனர். அதேபோல தனிப்பட்ட விரோதம் உள்ளிட்ட பல சம்பவங்களாலும் மரணங்கள் நடைபெற்று உள்ளன.
இது மத்திய அரசிடம் எடுத்துச்சொல்லத் தகுதியான பிரச்சினையா என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.