நாட்டின் ஒவ்வொரு முஸ்லிமும் சிஏஏ.வை வரவேற்க வேண்டும் - அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் ஆதரவு!
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை முஸ்லிம் வரவேற்க வேண்டும் என்று முஸ்லிம் ஜமாத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சி.ஏ.ஏ
கடந்த 2014 மற்றும் அதற்கு முன்பு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் நாடுகளில் மதம் சார்ந்த பிரச்சனைகளால், இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தார்கள் மக்கள்.
அதில், முஸ்லிம்கள் அல்லாதோருக்கு (இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்பட) இந்திய குடியுரிமை வழங்கும் நோக்கோடு குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், இதனை அமல்படுத்துவதற்கு முன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தது. 5 ஆண்டுகளுக்கு பின், இந்த சிஏஏ சட்டம் அமலுக்கு வந்தது.
இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட நிலையில், மக்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது முழுவதும் ஆன்லைன் வழி மட்டுமே நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.
ஜமாத் தலைவர்
இந்நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் ரஜ்வி பரேல்வி பேசியபோது, இந்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தினை (சி.ஏ.ஏ.) அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்திற்கு நான் வரவேற்பு தெரிவிக்கிறேன். இதற்கு முன்பே இதனை செய்திருக்க வேண்டும். ஆனாலும் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கு பதில், காலதாமதத்துடன் தொடங்கியிருப்பதும் நன்றே என கூறியுள்ளார்.
இந்த சட்டம் பற்றி முஸ்லிம்கள் இடையே தவறான புரிதல்கள் நிறைய உள்ளன. முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தினால் பாதிப்பு எதுவும் இல்லை. இதற்கு முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் மதம் சார்ந்த அராஜகங்களை சந்தித்து இந்தியா வந்த முஸ்லிம்கள் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க முன்பு எந்த சட்டமும் இல்லை.
சிஏஏ.வால் நாட்டிலுள்ள கோடிக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்படமாட்டார்கள். அது எந்தவொரு முஸ்லிமின் குடியுரிமையையும் பறித்து விடாது. கடந்த காலங்களில் தவறான புரிதல்களால் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.
முஸ்லிம்கள் இடையே சில அரசியல்வாதிகள் தவறான புரிதல்களை உருவாக்கி வைத்திருந்தனர். நாட்டின் ஒவ்வொரு முஸ்லிமும் சிஏஏ.வை வரவேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.