மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு.. ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை!
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சிறப்பு கூட்டத் தொடர்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது, இது 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம் முடிந்த பின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இட ஒதுக்கீடு
இந்நிலையில், பல வருடங்களாக நிலுவையில் இருந்த நிலையில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததால் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படலாம். குறிப்பாக நேற்று தொடங்கிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரிலேயே மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மசோதா மாநிலங்களவையில் ஒப்புதல் பெற்றுள்ளது, அதனால் தற்பொழுது மக்களவையில் ஒப்புதல் பெற வேண்டும். மேலும், இந்த சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் கூறியது குறிப்பிடத்தக்கது.