போர் தீவிரம்; ஏவுகணைத் தாக்குதலில் இந்திய தொழிலாளி உயிரிழப்பு - இருவர் படுகாயம்!
இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதலில் இந்தியவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
போர் தீவிரம்
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில் இதுவரை சுமார் 30,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலை சேர்ந்த 253 பேரை காசாமுனைக்கு பணய கைதிகளாக கடத்தி சென்றனர். மேலும்,100க்கும் மேற்பட்ட பணய கைதிகளை ஒப்பந்தம் அடிப்படையில் ஹமாஸ் விடுவித்தது.
இன்னும் 134 கைதிகள் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்ததை அடுத்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது.
ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேலின் மார்கலியோட் பகுதியில் நேற்று நடந்த ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதலில் 3 இந்திய தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர். மேலும், கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த 31 வயதான நிபின் மேக்ஸ்வெல் என்பவர் பரிதாபமாக உயிரிழிந்துள்ளார்.இதர 2 தொழிலாளர்களான ஜோசப் ஜார்ஜ், பால் மெல்வின் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட பதிவில், நேற்று மதியம் வடக்கு கிராமமான மார்கலியோட்டில் பழத்தோட்டத்தில் பயிரிட்டுக்கொண்டிருந்த அமைதியான விவசாயத் தொழிலாளர்கள் மீது ஷியா பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டது.இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது மற்றும் இருவர் காயமடைந்தது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் அந்த பதிவில், உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது பிரார்த்தனைகள். காயமடைந்தவர்களுக்கு இஸ்ரேலிய மருத்துவமனைகள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன. பயங்கரவாதத்தால் காயமடைந்த அல்லது கொல்லப்பட்டவர்களை, இஸ்ரேல் - வெளிநாட்டினர் என்ற பேதமின்றி சமமாகவே கருதுகிறோம். இழப்பு கண்ட குடும்பங்களுக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு உதவிகளை வழங்கவும் நாங்கள் இருப்போம் என்று தெரிவித்துள்ளது.