இதயம் கொடுத்த இந்தியா - சென்னையில் மறுவாழ்வு பெற்ற பாகிஸ்தான் பெண்!
இந்தியர் ஒருவரின் இதய தானம் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் புதிய வாழ்க்கையை பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் பெண்
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் ஆயிஷா ராஷன் (19). இவர் கடந்த 10 ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனிடையே கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா வந்த அவர் இதய செயலிழப்பை தவிர்க்க கருவி மூலம் சிகிச்சை மேற்கொண்டார்.
ஆனால், ஆயிஷா உயிரை காப்பாற்ற இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனால் மீண்டும் சிகிச்சைக்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகினர். ஆனால், இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.35 லட்சம் தேவைப்பட்டது.
இதய தானம்
இதனால் எளிய பின்னணியை கொண்ட ஆயிஷாவுக்கு தனியார் மருத்துவமனை ஏற்பாட்டில், அறக்கட்டளை மூலம் பணம் தயார் செய்யப்பட்டது. இதற்காக 18 மாதங்கள் சென்னையில் தங்கியிருந்த அவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் டெல்லியிலிருந்து இதய தானம் கிடைத்தது.
இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆயிஷாவுக்கு இலவசமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஆயிஷா இந்திய அரசுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், தனது பேஷன் டிசைனிங் கனவை நோக்கி முன்னேறுவேன் என்றும் கூறியுள்ளார்.