5 வயதில் தந்தை மரணம்; ஒரு ஜோடி ஷூ, 2 டி-ஷர்ட் தான் - வறுமையை தகர்த்து சாதித்த பும்ரா!
முயன்றால் எந்த வறுமையையும் உடைத்து சாதிக்கலாம் என்பதற்கு ஜாஸ்பிரித் பும்ரா மிகப்பெரிய எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
ஜாஸ்பிரித் பும்ரா
இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் ஜாஸ்பிரித் பும்ரா. தனது தனித்துவமான பந்துவீச்சால் சர்வதேச கிரிக்கெட்டில் உச்சத்தை தொட்டுள்ளார்.
ஆரம்ப காலகட்டங்களில் வாய்ப்புக்காக மிகவும் சிரமப்பட்ட பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வாளர்கள் கண்ணில் பட்டுள்ளார். அப்போது இவரது பந்துவீச்சு மும்பை அணியின் முதன்மை பந்துவீச்சாளராக இருந்த லசித் மலிங்கா போலவே இருந்தது. இது மும்பை அணி தேர்வாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
இதனையடுத்து கடந்த 2013ம் ஆண்டு முதல் பும்ராவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பு பயிற்சிகளை வழங்கியது. அங்கிருந்து பும்ரா மும்பை அணியின் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக மாறினார். தற்போது இந்திய அணியிலும் தனது தனித்துவமான பந்துவீச்சால் கலக்கி வருகிறார்.
ஆனால் தனது இளமைக் காலத்தில் பும்ரா, மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருந்துதான் மிகப்பெரிய இடத்திற்கு வந்திருக்கிறார். பும்ராவின் 5 வயதில் அவரின் தந்தை மறைந்துவிட்டார். பின்னர் அவரின் தாயார் தான் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி இருக்கிறார்.
முயன்றால் சாதிக்கலாம்
இதுகுறித்து முன்பு ஒரு பேட்டியில் பும்ரா கூறியதாவது "அப்போது எதையும் வாங்க முடியாத நிலையில் இருந்தோம். நான் கிரிக்கெட் ஆடத் துவங்கிய போது என்னிடம் சாதாரண ஷூ ஒரு ஜோடியும், இரண்டு டி ஷர்ட்களும் மட்டுமே இருந்தன.
தினமும் போட்டிருக்கும் டி ஷர்ட்டை துவைத்து மீண்டும், மீண்டும் பயன்படுத்தி வந்தேன்" என்று தெரிவித்துள்ளார். யாராவது நம்மை பெரிய கிரிக்கெட் கிளப்பில், மாநில அணியில் தேர்வு செய்துவிட மாட்டார்கள் என்ற ஏக்கத்தில் இருந்துள்ளார். ஒருமுறை கிரிக்கெட் விளையாட நைக் ஷூ வேண்டும் வேண்டும் என தனது தாயாரிடம் கேட்டுள்ளார்.
ஆனால், அப்போது இருந்த குடும்ப வறுமையால் அவரால் அதை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. ஒருநாள் நானே சம்பாதித்து வாங்குவேன் என அப்போது உறுதி எடுத்த பும்ரா, பின்னர் அதனை செய்தும் காட்டியுள்ளார். முயன்றால் எந்த வறுமையையும் உடைத்து சாதிக்கலாம் என்பதற்கு பும்ரா மிகப்பெரிய எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.