டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அபாரம் - ஒரே நாளில் 5 சாதனைகளை படைத்த இந்தியா
வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரே நாளில் 5 சாதனைகளை படைத்துள்ளது.
வங்கதேச டெஸ்ட் போட்டி
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது.
கான்பூரில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணமாக 35 வது ஓவர் முடிவில் முதல் நாள் போட்டி நிறுத்தப்பட்டது.
வங்கதேசம் ஆல் அவுட்
தொடர்ந்து மழை பெய்ததால் 2வது, 3வது நாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. 4வது நாள் போட்டியில் 107/3 என்ற கணக்கில் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி, 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
அதன் பிறகு முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. ரோகித் சர்மா முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர் விளாச, மறுபுறம் ஆடிய ஜெயஸ்வாலும் தன்னுடைய பங்கிற்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்திய அணி 19 பந்துகளில் 50 ரன்களை எட்டியது.
இந்தியா சாதனை
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி அதிவேகமாக 50 ரன்களை கடந்தது இதுவே ஆகும். இதன் பின் இந்திய அணி 10.1வது ஓவரில் 100 ரன்கள் எட்டியாது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அதிவேகமாக 100 ரன்கள் அடித்ததாகும்.
தொடர்ந்து அதிரடியாக ஆடி 18.2 ஓவரில் 150 ரன்களும், 24.2 ஓவர்களிலும் 200 ரன்களும், 30.3 ஓவர்களில் இந்திய 250 ரன்களும் குவித்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 50, 100, 150 ,200 ,250 ஆகிய ரன்களை அதிவேகமாக எட்டிய முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.