தொடர்ந்து வாலாட்டும் சீனா; தக்க பதிலடி கொடுக்கும் இந்தியா? மாஸ்டர் பிளான் இதுதான்!
சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்லை பிரச்சனை
இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. இதனால் அவ்வப்போது இந்திய எல்லைகளை உள்ளடக்கி, சீனா வரைபடத்தை வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் கூறிவருகிறது. மேலும், அம்மாநிலத்தில் உள்ள பல இடங்களுக்கு தன்னிச்சையாக புதிய பெயர்களை சூட்டி வருகிறது.
இந்தியா பதிலடி
கடைசியாக கடந்த மார்ச் மாதம் அருணாச்சல பிரதேசத்தின் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு கனவாய் மற்றும் ஒரு நிலப் பகுதிக்கு புதிய பெயர்களை சூட்டியிருந்தது.
இதற்கு இந்தியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டின் தன்னாட்சிப் பகுதியான திபெத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு,
புதிய பெயர் சூட்ட இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த இடங்களின் பட்டியல் ராணுவத்தின் மூலம் இறுதி செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.