சீண்டும் சீனா; இந்தியா கிராமங்களுக்கு சீன மொழியில் பெயர்- கொதிக்கும் இந்தியா!
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை குறித்து அவ்வப்போது ஏதாவது கருத்துகளை வெளியிட்டு இந்தியாவை தொடர்ந்து சீண்டி வருகிறது.
அந்த வகையில் தற்போது, அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களின் மொழியில் புதிய பெயர்களை அறிவித்தும், தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்தும் சீனா தொடர்ச்சியான அத்துமீறல்களை செய்துவருகிறது.
சீன சிவில் விவகார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேசத்தின் இடங்களை மறுப்பெயரிட்டு வருகிறது. ஏற்கனவே மறுப்பெயரிட்டு 3 பட்டியல்களை வெளியிட்ட நிலையில், தற்போது நான்காவது பட்டியலை வெளியிட்டுள்ளது.
சீண்டும் சீனா
அருணாச்சலப் பிரதேசத்தை சீனா 'ஜாங்னான்' என்ற பெயரில் அழைத்து வருகிறது. இதற்கிடையில், அந்நாடு மறுபெயர் வைக்கப்பட்ட இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலை கணவாய் உள்ளிட்டவை அடங்கும்.
இவற்றை சீன மொழியான மாண்டரின் மொழியிலும், திபெத்திய மொழியிலும் மாற்றியுள்ளது சீன அரசு. அதனை தனது அரசு நாளிதழிலும் சீனா வெளியிட்டுள்ளது.
சீனாவின் இத்தகைய நடவடிக்கைக்கு பலமுறை கண்டித்துள்ள இந்தியா, அந்த மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், புதிய பெயர்களை வைப்பது, நிஜத்தை மாற்றாது எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.