நடுவரின் தவறான தீர்ப்பு - தகர்ந்தது இந்தியாவின் மிகப்பெரிய கனவு - என்ன நடந்தது?
இந்திய கால்பந்து அணியின் உலகக் கோப்பை கனவு நடுவரின் தவறான தீர்ப்பால் பறிபோயுள்ளது.
தகுதிச் சுற்று
உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா - கத்தார் அணிகள் மோதின.
இந்த போட்டியில் வென்றால் இந்திய அணி மூன்றாவது கட்ட தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டியின் 37-வது நிமிடத்தில் சாங்டே கோல் அடிக்க, இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இதனையடுத்து 73-வது நிமிடத்தில் கத்தார் அணிக்கு ஃப்ரீகிக் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கத்தார் வீரர்கள் அடித்த பந்தை இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து பாய்ந்து தடுத்தார். அப்போது பந்து அவரது கையிலிருந்து நழுவி பின்புறம் எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்றது.
தவறான தீர்ப்பு
ஆனால், அதை கத்தார் வீரர் ஹஷ்மி ஹுசைன் மீண்டும் உள்ளே கொண்டு வந்து யூசுப் அய்மிடம் கொடுக்க அதை வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார். இதற்கு இந்திய அணி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும்,
தென் கொரிய நடுவர் கிம் வூ-சங் அதனை கோல் என அறிவித்தார். இதனையடுத்து 1 -1 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையை அடைந்ததும், கடைசி 5 நிமிடங்கள் கத்தார் அணி 2-வது கோலை அடித்தது. இறுதியில்2-1 என்ற கோல் கணக்கில் கத்தார் அணி வெற்றி பெற்றது.
இதனால், உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றின் 3-வது கட்டத்துக்கு முன்னேறி சாதனை படைக்கும் இந்திய அணியின் கனவு நடுவரின் தவறான தீர்ப்பால் பறிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.