12 ஆண்டு கால சாதனையை இழந்த இந்திய அணி - வரலாறு படைத்த நியூசிலாந்து
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததன் மூலம் 12 ஆண்டு கால சாதனை தகர்ந்துள்ளது.
நியூசிலாந்து டெஸ்ட்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
புனேயில் நடந்த 2வது டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, 259 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அபாரமாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்களை கைப்பற்றினார்.
தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
அதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 156 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிக பட்சமாக ரவீந்திர ஜடேஜா 38 ரன்கள், சுப்மன் கில் 30 ரன்கள் எடுத்து இருந்தனர்.
இதன் பின் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, 258 ரன்கள் குவித்தது. 359 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 245 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இதனால் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்ட்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2வது டெஸ்டிலும் வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
12 ஆண்டு சாதனை
இதன் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரில் தோல்வியடையாத இந்திய அணி தற்போது நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது.
இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது.