இலங்கையை வைத்து விளையாடும் சீனா - இந்தியா தக்க பதிலடி!
சீன உளவுக் கப்பலின் வருகையை எதிர்த்த இந்தியாவை விமர்சித்த சீன தூதருக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
யுவான் வாங் 5
சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பல் இலங்கை வர இந்தியா கவலை தெரிவித்திருந்த நிலையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி யுவான் வாங் 5 கப்பல் இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து ஒரு வாரம் அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி புறப்பட்டு சென்றது.

இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன கப்பல் இலங்கை வந்தது. இந்நிலையில், இலங்கைக்கான சீன தசதர் ஜென் ஹோங் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில்,
சீன தசதர் ஜென் ஹோங்
' பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறி சிலர் ஆதாரம் இல்லாமல் இலங்கை உள் விவகாரங்களில் தலையிட்டு வருகின்றனர். இலங்கையின் சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கும் நோக்கில் அதன் மீது ஆதார மற்ற குற்றச்சாட்டுகளை சில நாடுகள் கூறி வருகின்றன.

இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மீதான மீறல்களை சீனா பொறுத்து கொள்ளாது' என தெரிவித்துள்ளார். இதற்கு கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் சீனாவிற்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டது.
இந்தியா பதிலடி
அதில், “சீன தூதரின் கருத்துக்களை நாங்கள் கவனித்தோம். சீன தூதர் அடிப்படை ராஜதந்திர நெறிமுறைகளை மீறி இருக்கிறார். இலங்கையின் அண்டை நாடுகள் பற்றிய அவரது பார்வை அவரது சொந்த நாடு எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதன் வெளிப்பாடாக இருக்கலாம்.
இந்தியா அப்படியானது இல்லை. இந்தியா மிகவும் வித்தியாசமானது. இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடன் பிரச்சனை உள்ளது. இலங்கைக்கு இப்போது தேவை ஆதரவுதான்.
மற்றொரு நாட்டின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தித்தான் ஆக வேண்டும் என்கிற தேவையற்ற அழுத்தங்கள், சர்ச்சைகள் இலங்கைக்கு தேவை இல்லை” என தெரிவித்துள்ளது.