இனி மனிதர்கள் நிலவுக்கு செல்லலாம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இஸ்ரோவின் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ககன்யான் திட்டம்
இஸ்ரோ சந்திரயான் - 3 திட்டத்தில் நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து சந்திரயான் - 4 திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக 2,104 கோடி ரூபாய் ஒதுக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலவில் உள்ள மண் மற்றும் பாறைக் கற்களை பூமிக்கு எடுத்து வரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
அதேபோல், வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் திட்டத்திற்காக 1,236 கோடி ரூபாய், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனைக்கு 20 ஆயிரத்து 193 கோடி நிதி.
தற்போது இருப்பதைவிட 3 மடங்கு எடையை கொண்டு செல்லும் வகையிலான அடுத்த தலைமுறை ராக்கெட்டுகளை தயாரிக்கும் இஸ்ரோவின் திட்டத்திற்கும் 8,239 கோடி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த ராக்கெட்டுகள் மீண்டும் பயன்படுத்தும் வகையில் இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2040-ஆம் ஆண்டு மனிதனை நிலவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தில் முக்கிய பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.