விண்வெளி செல்லும் சென்னை வீரர்; திட்டத்தின் நோக்கமே வேறயாம் - விஞ்ஞானி விளக்கம்!
ககன்யான் திட்டம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விஞ்ஞானி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
ககன்யான் திட்டம்
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்லும் 4 விமானிகளின் பெயரை பிரதமர் மோடி வெளியிட்டார். அவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த விமானப்படை குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன்.
விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஜனாதிபதியிடம் இருந்து தங்கப்பதக்கம் மற்றும் மரியாதை வாள் பெற்றுள்ளார். இந்நிலையில், ககன்யான் திட்டம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசின் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் பதிலளித்துள்ளார்.
சென்னை வீரர்
மனிதர்களை விண்வெளிக்கு பறக்க வைப்பது மட்டும்தான் திட்டமா என்ற கேள்விக்கு, 'ககன்' என்றால் விண்வெளி, 'யான்' என்றால் கலன் என்று பொருள். அதாவது விண்வெளிக்கு செல்லும் விண்கலன். இந்த விண்கலத்தை தயாரிப்பதுதான் ககன்யான் திட்டத்தின் பிரதான நோக்கம்.
உதாரணமாக, விண்வெளியில் ஆக்சிஜன் இருக்காது, எனவே விண்வெளி வீரர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை, கார்பன் தனியாகவும், ஆக்சிஜன் தனியாகவும் பிரித்து கொடுக்கும் கருவியை உருவாக்க வேண்டும். அதேபோல விண்வெளி வீரர்கள் உடலிலிருந்து வெளியேறும் வியர்வை உள்ளிட்டவற்றை மறு சுழற்சி செய்ய வேண்டும்.
இதற்கான கருவிகளை கண்டுபிடித்து, அதை விண்கலத்தில் பொருத்தி சரிபார்ப்பதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம். இறுதியாகத்தான் மனிதர்கள் இந்த விண்கலத்தில் விண்வெளிக்கு செல்வார்கள் என்றார். மேலும், எத்தனை நாட்களுக்கு மனிதர்கள் விண்வெளியில் இருப்பார்கள்? என்றதற்கு,
"ககன்யான் திட்டத்தின்படி 3 பேர் விண்வெளிக்கு செல்வார்கள். தற்போது 4 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் கூடுதலாக இருக்கும் ஒருவர், ஸ்டேன்ட்பை-யாக இருப்பார். முதல் முறை விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் மூன்று பேரும், பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் விண்வெளியை பலமுறை சுற்றிவிட்டு பூமிக்கு திரும்புவார்கள். அடுத்தடுத்த மிஷன்களில் இந்த பயணம் விரிவுபடுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.