இங்கிலாந்து அணியை ஊதி தள்ளிய இந்தியா அணி - 434 ரன்களில் வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.
3-வது டெஸ்ட்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத்தின் ராஜ்கோட் மைதானத்தில் கடந்த 15-ஆம் துவங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 445 ரன்களை எடுத்தது.
இந்தியா அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 319 ரன்களை குவித்தது. அந்த அணியில் பென் டக்கெட் 153 ரன்களை விளாசினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா அணி இன்று 4ம் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அணியில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி அசத்தினார்.
557 ரன்களை டார்கெட்டாக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் வீழ்ந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பந்துவீச்சாளர் மார்க் உட் 33 ரன்களும் டாம் ஹார்ட்லி, பென் போக்ஸ் தலா 16 ரன் எடுத்தனர்.
122 ரன்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. ஜடேஜா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா, குல்தீப்,
அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது குறிப்பிடத்தக்கது.