இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்குமா? ராகுல் காந்தி என்ன சொன்னார் தெரியுமா!
வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார் ராகுல் காந்தி.
வாக்கு எண்ணிக்கை
2024 நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (4 ஜூன் 2024 ) காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய கள நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி 290 இடங்களிலும், இந்தியா கூட்டணி 235 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், தேசிய அளவில் எந்த ஒரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சியே அமையும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே முன்னிலை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் தருமபுரி மற்றும் விருதுநகர் தொகுதியில் பிற கட்சிகள் முன்னிலை வகித்தாலும் மாலையில் கள நிலவரம் மாறியது.மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே முன்னிலையில் உள்ளது.
செய்தியாளர் சந்திப்பு
இந்த சூழலில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதில் பேசிய ராகுல் காந்தி, “மக்களவைத் தேர்தலில் மக்கள் மோடியை புறக்கணித்துவிட்டனர். இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டதன் காரணமாகவே இந்த வெற்றி சாத்தியமானது. பாஜகவை மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத் துறை, நீதித் துறை அமைப்புகளை எதிர்த்து நின்று வென்றுள்ளோம்.
இந்திய கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்த கேள்விக்கு, “எங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளோம். இந்தக் கேள்விகள் அங்கு எழுப்பப்பட்டு, அதுகுறித்து பதில் அளிக்கப்படும். கூட்டணி கட்சிகளிடம் கருத்து கேட்காமல் எந்த அறிவிப்பையும் நாங்கள் வெளியிட மாட்டோம்” என்று தெரிவித்தார்.
பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த இரு கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி முயற்சி செய்கிறது. யார் ஆட்சி அமைப்பார்கள் என இந்தியா மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.