கூட்டணிக்கு வாங்க..பிரதமர் - அமைச்சர் பதவி waiting - துவங்கிய கூட்டணி பேரம்!!
இந்தியா மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், எந்த கட்சியும் தனி பெருபான்மை பெறவில்லை.
மக்களவை தேர்தல்
முடிவுகள் நாட்டின் 18-வது ஆளும் அரசை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இன்று வாக்கு எண்ணும் பாணி தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
தேசிய அளவில் இது வரை எந்த கட்சியும் தனிபெருபான்மை பெறவில்லை. பாஜக 237 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 7'இல் வெற்றி பெற்றுள்ளது. அதே போல, காங்கிரஸ் 93 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில், 4'இல் வெற்றி பெற்றுள்ளது.
நாட்டின் ஆட்சி அமைக்க பெருபான்மை 272 இடங்கள். இதனை எக்கட்சியும் எட்டவில்லை. இதனால் கூட்டணி கணக்குகள் துவங்கிவிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது 292 இடங்களையும், இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பெற்றுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை
குடியரசு தலைவர் முதலில் பாஜகவை தான் ஆட்சி அமைக்க அழைத்தாலும், அக்கட்சிக்கு கூட்டணி கட்சிகளின் உதவு தேவைப்படுகிறது. இந்நிலையில் தான், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பீகார் மாநிலத்தின் நிதிஷ் குமாரின் ஜனதா தள கட்சியிடம் இந்தியா கூட்டணியை சேர்ந்த மூத்த தலைவரான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியா கூட்டணிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது. ஜனதா தள் கட்சி முதலில் இந்தியா கூட்டணியில் தான் இருந்தது. தற்போது வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளில் அக்கட்சி 14 இடங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடனும் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இந்தியா கூட்டணிக்கு அவரை அழைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தெலுங்கு தேச கட்சி 16 இடங்களையும், அக்கட்சியின் கூட்டணியில் இருக்கும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 2 இடத்தையும் முன்னிலை பெற்றுள்ளது. கூட்டணிக்கு வரும் பட்சத்தில் அமைச்சரவையில் இடமளிக்கப்படும் என்றும் பேசியதாக கூறப்படுகிறது.