SKY-இன் வெறித்தனம்..!! குல்தீப் யாதவின் மேஜிக்..! இந்தியா அபார வெற்றி
நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
கடைசி டி20
முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், 2-வது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. தொடரை சமன் செய்ய வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் இளம் இந்திய அணி நேற்று களமிறங்கியது.
ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்று இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. சுப்மன் கில் 12, திலக் வர்மா டக் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் உடன் ஜோடி சேர்ந்து முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
41 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். கடைசி 7 ஓவர்கள் இருக்கும் போது வேகமாக ரன் குவிக்க துவங்கிய சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் 7 பவுண்டரி, 8 சிக்சஸர்களை விளாசி தனது நான்காவது டி20 சதத்தை நிறைவு செய்தார்.இந்த சதம் மூலம் ரோஹித் சர்மாவின் செஞ்சுரி சாதனையை சமன் செய்தார். ரோஹித் சர்மா மற்றும் கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே சர்வதேச டி20 போட்டிகளில் நான்கு சதம் அடித்து இருக்கின்றனர். அந்த சாதனையை சமன் செய்து வரலாறு படைத்தார் சூர்யகுமார் யாதவ்.
மிரட்டிய குல்தீப்
அணியின் கேப்டன் சூர்யகுமார் சதம் அடித்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியை இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் கதிகலங்க வைத்தனர். கணிசமான இடைவேளையில் தென்னாபிரிக்கா அணி ஆட்டமிழக்க துவங்கினர்.
இந்திய அணி குல்தீப் யாதவ் மிரட்டலாக பந்துவீசி முழுவதுமாக இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். வெறும் 2.5 ஓவர்கள் அதாவது 23 பந்துகளை மட்டுமே வீசிய அவர், 17 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே போல, ஜடேஜா 2 விக்கெட், அர்ஷிதீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்த தென்னாபிரிக்கா அணி 13.5 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல் -அவுட்டானது.