பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வு..இதுதான் காரணம் - அன்பில் மகேஷ் விளக்கம்!
பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
விலை உயர்வு
தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் கடந்த 2011-ம் ஆண்டு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. அதன் மூலம், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு ஒரே பாடத்திட்டம் என்ற நடைமுறை வந்தது.
வகுப்பு வாரியாக புத்தகங்களை அச்சிட்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வழங்கியது. நடப்பாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பாடப்புத்தகங்களின் பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தது ரூ,40 முதல் அதிகபட்சமாக ரூ,90 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது,1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ,30 முதல் ரூ,40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ,30 முதல் 50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 8ம் வகுப்பு புத்தகங்கள் ரூ,40 முதல் ரூ,70 வரையும், 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு ரூ,50 முதல் ரூ,90 வரையும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன.
அன்பில் மகேஷ்
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பாடப் புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம், மேல் அட்டைகளின் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது காகித விலை 63 சதவீதமும், மேல் அட்டை விலை 33 சதவீதமும், அச்சுக்கூலி 21 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதனை ஈடுகட்டும் வகையிலேயே பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்கு பின் உயர்த்தப்பட்டுள்ளது
இந்த விலை உயர்வு லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை. பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடபுத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.