பவதாரிணியின் கடைசி ஆசை; உலகம் முழுதும் பரவும் - அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா
பவதாரிணியின் கடைசி ஆசையான சிறுமிகளுக்கான இசைக்குழு உருவாக்கப்படும் என இளையராஜா அறிவித்துள்ளார்.
பவதாரிணி
பிரபல இசையமைப்பாளார் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி, கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், தன்னுடைய 47வது வயதில் உயிரிழந்தார்.
அவரின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்வு நேற்று முன்தினம் (12.02.2025) அனுசரிக்கப்பட்டது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு உட்பட இளையராஜாவின் குடும்பத்தினரும் திரைத்துறையினரும் கலந்து கொண்டனர்.
இளையராஜா
இந்த நிகழ்வில், பவதாரிணி கடைசியாக இசையமைத்த ‘புயலில் ஒரு தோணி’ படத்தின் இசையினை இளையராஜா வெளியிட்டார். தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட பலரும், பவதாரிணி குறித்தநினைவுகளை பகிர்ந்தனர்.
அப்போது பேசிய இளையராஜா, "இன்று பவதாரிணியின் பிறந்த நாளும், அவர் இறந்த திதியும் ஒரே நாளில் வந்துள்ளது. அவரின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கிறது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.
கடைசி ஆசை
சிறுமிகளுக்கான ஒரு இசைக்குழுவை உருவாக்க வேண்டும் என்பதே பவதாரிணியின் கடைசி ஆசை.15 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த ஆர்கெஸ்ட்ரா. இனி உலகில் எந்த மூலையில் இருந்தும் சிறுமிகள் வந்தாலும் இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவில் சேரலாம்.
மலேசியாவில் இரு இசைக்குழுக்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். உலகின் எந்த மூலையிலிருந்து மாணவிகள் வந்தாலும் இந்த இசைக்குழுவில் சேரலாம். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். இது பவதாரிணியின் நினைவாக உலகம் முழுவதும் பரவும்" என பேசினார்.