ஸ்டாலின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சி - செல்வப்பெருந்தகைக்கு இளங்கோவன் பதிலடி!
செல்வப்பெருந்தகை பேச்சுக்கு இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஸ்டாலின் ஆட்சி
திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில், பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 'எவ்வளவு காலம் தான் இன்னொரு கட்சியிடம், எங்களுக்கு தொகுதிகள் கொடுங்கள் என, கையேந்தி நிற்பது?
ஒரு காலத்தில், நாம் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தோம். அந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த, காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
இந்நிலையில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய இளங்கோவன், என்னை பொறுத்தவரையில் தொண்டர்களுக்கு மனவருத்தம் இருந்தாலும்கூட, ஸ்டாலின் ஆட்சியை காமராஜர் ஆட்சி என, சொல்வதில் சிறிதும் தயக்கம் கிடையாது. தேர்தலுக்கு முன் காமராஜர் ஆட்சி பற்றி நாம் பேசியிருக்க முடியாது; பேசவும் கூடாது.
நல்லவேளை, தேர்தல் முடிந்த பின் பேசினோம். யார் நல்லாட்சி தந்தாலும், அது காமராஜர் ஆட்சிதான். ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். அவரை முழு மனதோடு பாராட்டுகிறேன். ஆட்சிக்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம்.
காமராஜர் ஆட்சி என, பெயர் வைக்கலாம்; திராவிட மாடல் ஆட்சி என்றும் பெயர் வைக்கலாம். கக்கனின் நேர்மையையும் சொல்லலாம். நல்லாட்சி நடத்துகிறவர்களுக்கு, நாம் துணை நிற்க வேண்டும் எனக் கூறி பதிலடி கொடுத்துள்ளார்.