3 மணி நேரத்தில் சென்னை டூ கொல்கத்தா; கடல் மேல் பறக்கும் கார் - 600 ரூபாயில் அசத்தல் திட்டம்
ஐஐடி மெட்ராஸின் உதவியுடன் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு 3 மணி நேரத்தில் கடல் மேல் பறக்கும் கார் உருவாக்கப்பட்டு வருகிறது.
கடல் மேல் பறக்கும் கார்
உலகம் தொழில்நுட்பத்தில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், மக்களின் போக்குவரத்து நேரத்தை குறைக்க புல்லெட் ரயில், ஹைப்பர் லூப் ரயில் என மணிக்கு 1000 கிமீ வேகத்தில் இயங்கும் போக்குவரத்து அமைப்பை உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
இதே போல் கடல் மேல் பறக்கும் வாகனம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா(anand mahindra) இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆனந்த் மகேந்திரா
இந்த பதிவில், "ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட்-அப்களை ஊக்குவிப்பதில் சிலிக்கான் வேலியுடன் போட்டியிடுவதாகத் தெரிகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய 'டெக் வென்ச்சர்' பற்றிய செய்தி வருகிறது.
IIT Madras promises to rival silicon valley in terms of nurturing startups…!
— anand mahindra (@anandmahindra) February 25, 2025
Almost every week there’s news of a new ‘TechVenture’
What I like about this one is not just the promise of exploitation of our vast waterways, but the fact that the design of the craft is stunning!… https://t.co/UttbRFYQGW
இதில் எனக்குப் பிடித்தது என்னவென்றால் நமது பரந்த நீர்வழிகளைப் பயன்படுத்துவதற்கான முயற்சியாக இருப்பது மட்டுமல்ல, இந்த வாகனத்தின் வடிவமைப்பு பிரம்மிக்க வைக்கிறது" என தெரிவித்துள்ளார்.
600 ரூபாய்
ஐஐடி மெட்ராஸின் இன்குபேஷன் பிரிவுடன், வாட்டர்பிளை டெக்னாலஜிஸ்(Waterfly Technologies) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், இணைந்து இதை தயாரித்து வருகிறது. இது குறித்து பேசிய அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் ஹரிஷ் ராஜேஷ், நீரில் இருந்து டேக் ஆப் செய்து 4 மீட்டர் முதல் 150 மீட்டர் உயரத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட உள்ள இந்த காரில், சென்னையில் இருந்து 1,600 கி.மீ தொலைவில் உள்ள கொல்கத்தாவிற்கு 3 மணி நேரத்தில் சென்று விடலாம்.
மணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும், இதற்கான பயணச்செலவு வெறும் 600 ரூபாய்தான். இது ரயிலில் மூன்றாம் வகுப்பு கட்டணத்தை விட குறைவு ஆகும். தற்போதைக்கு ஆரம்ப கட்டத்தில் இந்த திட்டம் உள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் 100 கிலோ எடையுள்ள முன் மாதிரி கார் ஒன்று தயாராகும். 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு டன் எடையுடன் பறக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்படும். 2026 ஆம் ஆண்டுக்குள் 20 பேர் வரை பயணிக்கும் மாதிரி காரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
எதிர்காலத்தில் சரக்கு போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் இந்த தொழில் நுட்பம் பயன்படும். தற்போது, ஐஐடி மெட்ராஸ் இந்த திட்டத்திற்கு நிதி உதவி அளிடது வரும் நிலையில், பாதுகாப்புத் துறையிடமிருந்தும் கூடுதல் நிதியை பெறும் முயற்சி செய்யப்பட்டு வருகிறது" என கூறியுள்ளார்.