இர்ஃபான் வீடியோ விவகாரம் - அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு
இர்ஃபான் வீடியோ விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
யூ டியூபர் இர்ஃபான்
பிரபல யூ டியூபர் இர்ஃபான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதை அறிவிக்கும் விழா நடத்தினார்.
மேலும் அதை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைத் தெரிந்துகொள்வது இந்திய சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால் பல்வேறு தரப்பினரும் இர்ஃபானின் செயலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
தொப்புள் கொடி வீடியோ
இதனையடுத்து இந்த வீடீயோவை நீக்கி விட்டு இர்ஃபான் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். அவர் பாலினம் கண்டறிந்தது துபாயில் உள்ள மருத்துவமனை என்பதால் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்த போது அறுவை சிகிச்சை அறையில் குழந்தைக்கும் தாய்க்கும் இடையே உள்ள தொப்புள் கொடியை தானே வெட்டி அதை வீடியோவாக தனது யூ டியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி உரிய அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அறைக்குள் செல்ல வேண்டும் மற்றும் முறையான அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் கத்தரிக்கோல் பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ள நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானது.
10 நாள் தடை
இந்த முறை இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து இர்ஃபான் மற்றும் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைக்கு ரூ.50,000 அபராதம் விதித்ததோடு, 10 நாட்களுக்கு புதிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தடை விதித்து ஊரக நலப்பணிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சிகிச்சையில் இருப்பவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.