லேசான காய்ச்சல்: ஆன்டிபயாடிக் கொடுக்கக்கூடாது - ஐசிஎம்ஆர்
லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் கொடுப்பதை தவிர்க்க மருத்துவர்களுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.
லேசான காய்ச்சல்
உலக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்நிலையில், கணிசமான இந்தியர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பலனளிக்காமல் போவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதில், தோல் மற்றும் மென்மையான திசு தொற்றுக்கு 5 நாட்களுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் பரிந்துரைக்க வேண்டும். கம்யூனிட்டி அக்யூயர்டு நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், ஹாஸ்பிடல் அக்யூயர்டு நிமோனியாவுக்கு 8 நாட்களுக்கும் மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும்.
ஆன்டிபயாடிக்
கண்காணிப்பின் அடிப்படையில் வழங்கப்படும் எம்பரிக் ஆன்டிபயாடிக் சிகிச்சை, தீவிர தொற்று ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று ஐசிஎம்ஆர் குறிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் பலதரப்பட்ட நோயாளிகளை ஐசிஎம்ஆர் பரிசோதனை செய்தது.
அப்போது கார்பபெனம் ஆன்டிபயாடிக் மருந்து கணிசமான மக்களுக்கு பலனளிப்பதில்லை என்பது தெரியவந்தது. அந்த ஆன்டிபயாடிக் மருந்து அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில் அம்மருந்தைவிட நோய்க்கிருமி வீரியம் பெற்றுள்ளது.
இதனால் அந்த மருந்தால் நோய்க்கிருமியை அழிக்க முடியவில்லை. அதேபோல் பாக்டீரியம் கிளெப்சில்லா நிமோனியாவுக்கு வழங்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் வீரியம் இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.