சென்னைக்கு வர உள்ள ஏசி மின்சார ரயில் - ஐ.சி.எஃப் கொடுத்த அப்டேட்
சென்னைக்கு ஏசி மின்சார ரயில் தயாரிக்க உள்ளதாக ஐ.சி.எஃப் அறிவித்துள்ளது.
ஐ.சி.எஃப் தொழிற்சாலை
சென்னை பெரம்பூரில் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் இந்திய இரயில்வேயின் ஐ.சி.எஃப்(ICF) தொழிற்சாலை அமைந்துள்ளது.
இங்கு இந்திய இரயில்வேக்கு தேவையான ரயில் பெட்டிகளை தயாரிப்பதோடு, தாய்லாந்து, பர்மா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏசி மின்சார ரயில்
தற்போது வந்தே பாரத் ரயில், எல்.எச்.பி என்னும் நவீன பெட்டிகள், போன்ற பல்வேறு வகையான ரயில்களை தயாரிப்பதோடு, ஏசி மின்சார ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில்கள், வந்தே பாரத் ரயில் போலவே ஒரு முனையில் இருந்து இன்னொரு முனை வரை எளிதாக சென்று வரும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயிலில், தானியங்கி கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் மற்றும் அறிவிப்பு பெரும் வசதி, அனைத்துப் பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா ஆகிய வசதிகள் உள்ளது.
ஏற்கனவே மும்பைக்கு ஒரு ஏசி மின்சார ரயில் தயாரித்து வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னைக்கு 2 ஏசி மின்சார ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் இந்த ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது தாமதம் காரணமாக அடுத்த நிதியாண்டில் தயாரிக்க தொடங்க உள்ளதாக ஐ.சி.எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.