குவைத் நாட்டின் உயரிய விருது; எனக்கும் குடும்பம் இருக்கு.. விருது பெற்ற பிரதமர் மோடி உருக்கம்!
பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
உயரிய விருது
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக குவைத் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியை விமான நிலையத்தில், குவைத் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் ஃபஹத் யூசப் சவுத் அல்-சபா, வெளியுறவு அமைச்சர் மற்றும் பலர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், 'ஹலா மோடி' நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை குவைத்தில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது 40 வருடங்களுக்கு பிறகு, குவைத் வந்துள்ள இந்திய பிரதமர் தான் என பிரதமர் மோடி பெருமிதம் கொண்டார்.
மேலும் இந்திய ஆசிரியர்களும், இந்திய மருத்துவர்களும் குவைத் மக்களை வலிமைப்படுத்தி வருவதாக தெரிவித்தார். குவைத்தில் உள்ள தலைமை நிர்வாகிகளிடம் தான் பேசும்போது, அவர்கள் இந்தியர்களை பெரிதும் பாராட்டுவதாக கூறினார்.
பிரதமர் மோடி
இதையடுத்து, குவைத்தில் உள்ள கல்ஃப் ஸ்பிக் தொழிலாளர் முகாமுக்கு அவர் சென்றார். அப்போது அங்கு இருந்த இந்திய கட்டுமான தொழிலாளர்களுடன் கலந்துரையாற்றினார். தாங்கள் 8 முதல் 10 மணி நேரம் வேலை பார்ப்பதாக தொழிலாளர்கள் மோடியிடம் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, தொழிலாளர்களின் கடின உழைப்பைப் பார்த்து அவர்களைவிட தாம் ஒரு மணி நேரம் அதிகம் வேலை செய்ய விரும்புவதாக கூறினார். மேலும், தனக்கும் குடும்பம் இருக்கிறது, உங்கள் குடும்பங்களுக்காக நீங்கள் உழைப்பதைப்போல,
எனது குடும்பத்தில் உள்ள 140 கோடி மக்களுக்காகவும் தான் உழைக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, நட்பின் அடிப்படையில் அந்நாட்டின் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு ‘ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்’ விருதினை வழங்குகிறது.
இதற்கு முன்னர், இந்த விருதானது அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் ஆகியோருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.